புதுச்சேரி: போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவன வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். விதிமுறைகளை மீறியதாக 120 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 58 பள்ளி சிறப்பு பேருந்துகள் உட்பட 985, காரைக்காலில் 18 பள்ளி சிறப்பு பேருந்துகள் உட்பட 106, மாஹேவில் 26, ஏனாமில் 5 என நான்கு பிராந்தியங்களிலும் மொத்தம் 1,122 கல்வி நிறுவன வாகனங்கள் உள்ளன. இதற்கிடையே மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கிலும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கல்லி நிறுவனங்களின் வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி தற்போது கோடை விடுமுறை முடிந்து வருகின்ற 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு நிகழாண்டு புதுச்சேரிக்குட்பட்ட கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் மேட்டுப்பாளையத்தில் உள்ள கனரக வாகன முனையத்தில் (டிரக் டெர்மினல்) இன்று தொடங்கி நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் தலைமையில், ஆடிஓக்கள் சீதாராமராஜூ, பிரபாகரன், கலியபருமாள் மற்றும் வாகன ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலசுப்பிரமணி, சீனிவாசன், ரவிசங்கர், சண்முகநாதன் ஆகியோர் அடங்கிய 6 குழுவினர் வாகன ஆய்வை மேற்கொண்டனர்.
முதல் நாள் ஆய்வின்போது பள்ளி, கல்லூரி பேருந்துகள், வேன்கள் என மொத்தம் 281 வாகனங்கள் பங்கேற்றன. வாகனங்களின் தரம், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வாகனங்களின் ஆவணங்கள், ஓட்டுநர்களின் திறன் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 120 வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, போக்குவரத்து துறை அலுவலகத்தில் இயங்கும் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்படாமல் இருந்தது. மேலும் அவற்றில் சில குறைகளும் இந்தன. இதனால் அவற்றை நிவர்த்தி செய்து கொண்டுவரும்படி திருப்பி போக்குவரத்து துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
161 வாகனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்தும் சரியாக இருந்ததால் அவை ஏற்கப்பட்டன. அதற்கு அடையாளமாக அந்த வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, புதுச்சேரியில் கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கி நடந்தது.
இதில் முதல் நாளில் 281 வாகனங்கள் பங்கேற்றன. 161 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 120 வாகனங்களுக்கு சில குறைபாடுகள் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. சிறப்பு ஆய்வில் கலந்து கொண்ட வாகனங்களுக்கு ஆய்வு செய்யப்பட்டதின் அடையாளமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. தொடர்ந்து நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.
மாஹேவில் 26 வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இதில் 23 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 3 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காரைக்காலில் வருகின்ற 5-ம் தேதியும், ஏனாமில் 19-ம் தேதியும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
சிறப்பு முகாமில் அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆய்வில் பங்கேற்காத வாகனங்கள் ஒரு வார காலத்துக்குள் ஆய்வுக்கு உட்படுத்தி மாணவ, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தாத வாகனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பொருத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த வாகனங்களின் பர்மிட் முடக்கப்படும். என்றனர்.