புவனேஸ்வர்:பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பும் இல்லை என்று கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் ஹவுரா ரயில் புறப்பட்டு விட்டதாக தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. பாலசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் சந்திப்பில் இருந்து மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அந்த தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது, மணிக்கு 127 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
சரக்கு ரயில் மீது மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன.
அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இதனால், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் வேகத்தில் மோதியது. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 17 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் சிதறியதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அந்த ரயிலின் சில பெட்டிகள் முற்றிலும் உருகுலைந்துள்ளன. 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸில் 3 பெட்டிகள் மட்டுமே விபத்தில் சிக்கியதால் சேதம் குறைவாகவே உள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர். இதுவரை 288 பேர் உயிரிழந்ததாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் ஹவுரா ரயில் புறப்பட்டு விட்டதாக தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.