பெங்களூர்: கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் சந்தேகங்கள் எழுந்த நிலையில், இது குறித்து முதல்வர் சித்தராமையா அளித்த பதில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் 5 வாக்குறுதிகளை முக்கியமாக அளித்திருந்தது. இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தேர்தல் வெற்றிக்கு இந்த வாக்குறுதிகளும் முக்கியமானதாக இருந்தது.
இதற்கிடையே இந்த 5 வாக்குறுதிகளும் இந்தாண்டு நிறைவேற்றப்படாது என்று தகவல் வெளியான நிலையில், அதை மறுத்துள்ள சித்தராமையா 5 வாக்குறுதிகளும் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா 5 வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
அப்போது பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு முதல்வர் சித்தராமையா காமெடியான பதிலைக் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அனைத்து பெண்களுக்கும் மாநகர சாதாரண பேருந்தில் பயணிக்க இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கர்நாடகாவில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு இத்திட்டம் பொருந்தாது என்று தகவல்கள் வெளியானது.
இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சித்தராமையா, “அதெல்லாம் இல்லை.. அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும்.. என் மனைவிக்கும் கூட பஸ் பயணம் இலவசம் தான்” என்று காமெடியாக கூறினார். இந்த பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை…
இதைக் கேட்டவுடனேயே அங்கிருந்த அமைச்சர்கள் செய்தியாளர்கள் என அனைவரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர். அதன் பிறகு சில நொடி இடைவெளி விட்ட அவர், “கர்நாடக தலைமைச் செயலாளருக்கும் இலவச பஸ் திட்டம் பொருந்தும்” என்று தெரிவித்தார்.
இப்போது கர்நாடக தலைமைச் செயலாளராக வந்திதா சர்மா என்ற பெண் இருக்கிறார். அதாவது அரசு ஊழியர் தொடங்கி அனைவருக்கும் இத்திடம் பொருந்தும் என்பதையே முதல்வர் சித்தராமையா நகைச்சுவையாகும் அனைவருக்கும் புரியும்படியும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.