லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 172 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்தது.
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராவ்லி மற்றும் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 56 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து டக்கட்டுடன் ஓலி போப் ஜோடி சேர்ந்தார்.
இந்த இணை அயர்லாந்தின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரது விக்கெட்டுளையும் எடுக்க முடியாமல் அயர்லாந்து அணியினர் சிரமப்பட்டனர்.
இதில் டக்கட் இரட்டை சதத்தை நெருங்கிய வேளையில் 182 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஓலி போப் இரட்டை சதம் அடித்தார். அவர் 205 ரன்னும், ரூட் 56 ரன்னும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 524 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து 352 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து அயர்லாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது.