புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவின் மூன்று நகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த 2000-ம் ஆண்டு அரசியலில் இணைந்தபோது இப்படியெல்லாம் நடக்கும் என்பதை நான் நினைத்துப்பார்க்கவில்லை. குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன் என்பதை கற்பனையிலும் எண்ணிப்பார்க்கவில்லை. ஆனால், தற்போது அது உண்மையில் மக்களுக்கு சேவை செய்யும் பெரியவாய்ப்பினை எனக்கு வழங்கியுள்ளது.
உண்மையில் அதற்கான போராட்டம் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மிகப்பெரிய நிதி ஆதிக்கம், அரசு அமைப்புகள் கைப்பற்றப்படுவதை எதிர்த்தும், ஜனநாயகத்தை காப்பாற்றவும் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தொடர்ந்து போராடி வருகின்றன. எங்களுக்கான போராட்டத்தை நாங்கள் நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
இந்தியாவைச் சேர்ந்த இளம் மாணவ குழு இங்கு உள்ளது. அவர்களுடன் உறவாட, பேச விரும்புகிறேன். அதைச் செய்வது எனது உரிமை. ஆனால், பிரதமர் ஏன் இங்கு வந்து அதை செய்யவில்லை என்பது புரியவில்லை. வெளிநாட்டு பயணங்களில் நான் யாருடைய ஆதரவையும் நாடவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
‘மோடி’ பெயர் சர்ச்சை தொடர்பாக ராகுல் மீது போடப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்கியது. இதையடுத்து, இந்தாண்டு தொடக்கத்தில் அவர் வயநாடு தொகுதி எம்பி பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.