தமிழகத்தைச் சேர்ந்த செளரப் சாஜித் உசேன் என்பவர் வைர கற்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவர் தொழில் விசயமாக மும்பை வந்து டோங்கிரி என்ற இடத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவரின் பெண் தோழிகள் இரண்டு பேர் மும்பையில் இருந்து துபாய் செல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்களை வழியனுப்புவதற்காக உசேன் மும்பை விமான நிலையத்திற்கு சென்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்களை உசேன் வாங்கி இருந்தார்.
அதோடு உசேனிடம் ஏற்கெனவே 25 ஆயிரம் யுஏஇ நாட்டு கரன்சி இருந்தது. பெண் தோழிகள் விமான நிலையத்தில் ஷாப்பிங் செய்யவேண்டும் என்று கூறி 25 ஆயிரம் யுஏஇ கரன்சி கொண்டு வரும்படி கேட்டனர். எனவே உசேன் அப்பணத்தை கையோடு எடுத்துக்கொண்டார். அதோடு ஹோட்டல் அறையில் அமெரிக்க டாலரை வைத்து செல்வது பாதுகாப்பாக இருக்காது என்று கருதி அதனையும் தன்னோடு எடுத்துச்சென்றார். அவர் விமான நிலையத்தில் பெண் தோழிகளின் வருகைக்காக காத்திருந்தார். அந்நேரம் ஒரு பெண் உட்பட 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை சுங்க அதிகாரிகள் என்று கூறி உசேனை சோதனை செய்ய ஆரம்பித்தனர்.
சோதனையில் அமெரிக்க டாலர் மற்றும் யுஏஇ கரன்சி இருந்ததை கண்டுபிடித்து எடுத்துக்கொண்டனர். அந்த கரன்சியை சரிபார்க்கவேண்டும் என்று கூறி தங்களிடம் வைத்திருந்தனர். தங்களது உயர் அதிகாரி வருவதாக கூறிக் உசேனுடன் மூன்று பேரும் காத்திருந்தனர். அந்நேரம் ஏதோ காரணத்தை சொல்லிவிட்டு வந்துவிடுவதாக சொல்லிவிட்டுச் சென்றனர். அவர்களுக்காக உசேன் காத்திருந்தார். ஆனால் அவர்கள் திரும்ப வரவேயில்லை. இதனால் சந்தேகப்பட்டு உசேன் போலீஸில் புகார் செய்தார்.
சகார் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்க ஆரம்பித்தனர். விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு படையினரிடம் விசாரித்து பணத்தை பறித்துச் சென்ற பெண்ணை அதே நாளில் கைதுசெய்தனர். அவரது பெயர் சல்மா பானு என்றும், அவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய இரண்டு பேரை கைதுசெய்ய போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.