ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே லூப் பாதையில் நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரயில் மீது ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி முதல் விபத்துக்குள்ளானது.
அதற்கு பின்னர் பெங்களூரு-ஹவுரா ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. நேற்று இரவு முழுக்க நடந்த மீட்பு பணிகள் இன்று நிறைவடைந்துள்ள நிலையில் பலியானவர்களின் உடல்கள் ஓரிடத்தில் அருகருகே போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் முதியவர் ஒருவர் தனது மகனை அடையாளம் காண அங்கிருந்த உடல்களை ஒவ்வொன்றாக கதறியபடி தேடிய சம்பவம் இதயத்தை ரணமாக்குகிறது. இதுபோல விபத்துக்குளான ரயிலில் பயணித்து காணாமல் போனவர்களை உறவினர்கள் தேடி அலையும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி கலங்கடிக்கிறது.
இந்த நிலையில், ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கிடையே 4 பேர் கொண்ட ரயில்வே உயரதிகாரிகள் குழு நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரயில் விபத்துக்கு தவறான சிக்னல் கொடுத்ததே காரணம் என தெரிய வந்துள்ளது.
கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு உடனே ரத்து செய்ததால் ரயில் நிற்காமல் சென்று விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
மேலும், கோரமண்டல் ரயில் ஓட்டுநரின் தவறால் விபத்து நிகழ்ந்ததா எனவும் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி ‘ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது’ என்றும் அவர் தெரிவித்தார்.