சென்னை: இந்தியாவையே நேற்று மாலை முதல் உலுக்கிக் கொண்டிருக்கும் ஒடிசா ரயில் விபத்துக் குறித்து இதுவரை எந்தவொரு பதிவும் போடாமல் ஏகப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருப்பதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
புதிய நாடாளுமன்றம் குறித்து பதிவு போட்ட ரஜினிகாந்தும் அமைதியாக உள்ளார் என கடுமையான விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
அரசியலுக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் விஜய், சமூக சிந்தனை கொண்ட சூர்யா என யாருமே ஒரு சத்தமும் இன்றி வீக்கெண்ட் மோடில் அமைதியாக உள்ளார்களா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.
பிரியா ஆனந்த் முதல் ஜிவி பிரகாஷ் வரை: 288 உயிர்களை காவு வாங்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தை காலையில் தூங்கி எழுந்ததும் அறிந்த பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை பிரியா ஆனந்த், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், நடிகர் ஜூனியர் என்டிஆர், தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் மனவேதனையுடன் பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.
இந்த கோர விபத்துக்கு என்ன காரணம் என்பதையே இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாக அதிகாரிகளும் அமைச்சர்களும் தகவல் தெரிவித்து வருவதற்கு தங்கள் கண்டனங்களையும் அலட்சியம் காரணமாக நடைபெற்ற கோர விபத்து என விளாசியும் உள்ளனர்.
அக்ஷய் குமார் இரங்கல்: பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் கூட இந்த விபத்து நடந்தது தெரியாமல் இன்னமும் சனிக்கிழமை மோடில் உறங்கிக் கொண்டிருக்கின்றனரா என கேள்விகள் கிளம்பி உள்ளன.
நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும், எதிர்பாராதவிதமாக உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். இப்படியொரு மோசமான விபத்து குறித்த காட்சிகளை பார்க்கும் போது குலையே நடுங்குகிறது என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
ரஜினி முதல் விஜய் வரை அமைதி: ஆனால், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் இன்னமும் இப்படியொரு ரயில் விபத்து நடந்தது பற்றி தெரியாமலே உள்ளார்களா? ஏன் இவ்வளவு அமைதி என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை கால் இன்ச் கருணைக்கூடவா காட்ட முடியாது என விளாசி வருகின்றனர்.