புவனேஸ்வர் : ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு டீமில் இடம்பெற்றுள்ள பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ், இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 70 உடல்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 268 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றதாகவும், தற்போது ரயில்வே சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் தமிழ்நாடு டீம் : இதற்கிடையே இன்று காலை சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3 பேர் ஒடிசா சென்றனர். போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் குமார் ஜெயந்த், தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஒடிசா சென்றனர்.
விபத்தில் சிக்கியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், அவர்களை தமிழ்நாட்டுக்கு மீட்டு வரும் பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த குழுவினர் ஒடிசா சென்றனர். அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற நிலையில், பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ், உயிரிழந்தோர் கட்டாக் மருத்துவமனைக்குச் சென்றார்.
குமார் ஜெயந்த் ஐஏஎஸ் பேட்டி : பின்னர் இந்த விபத்து குறித்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடையாளம் காணப்பட்ட சடலங்களில் இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் இருப்பதாக எங்களுக்கு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், அடையாளம் தெரியாத வகையில் ஏராளமான சடலங்கள் உள்ளன எனவும், இதற்காக சென்னையில் இருந்து மாலையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்றும், சிக்கிய பயணிகளின் குடும்பத்தினர் அந்த ரயிலில் ஒடிசா மாநிலம் பத்ராக் நகருக்கு வரலாம் என்றும் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லை: ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள உடல்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.