மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் முதலில் தேர்வு செய்வது `கோரமண்டல் எக்ஸ்பிரஸ்’ ரயிலைத்தான். தென்கிழக்கு ரயில்வே மூலமாக இந்த ரயில் தினசரி இயக்கப்படுகிறது. கொல்கத்தாவின் ஷாலிமர்- சென்னையின் சென்ட்ரல் இடையே பயணிக்கிறது. ஆந்திராவின் விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு நான்ஸ்டாப்பாக பயணிப்பதால், ஆந்திர மக்களிடையேயும் மிகவும் பிரபலம்.
1977-ல் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படுகையில், வாரத்தில் இருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அப்போது, நான்கு நிறுத்தங்கள் இருந்தன. இந்த ரயில் மொத்தம் 1,659 கி.மீ தூரத்தை 25 மணி 30 நிமிடங்களிலேயே, மணிக்கு 130 கி.மீ வேகத்தில் கடக்கிறது.
வங்காள விரிகுடாவை ஒட்டிய இந்தியாவின் கிழக்குக் கடற்கரை, `சோழ மண்டல கடற்கரை’ என்று அழைக்கப்படுகிறது. அது, ஆங்கிலேயர்களால் `கோரமண்டல்’ என்று அழைக்கப்பட்டது. கிழக்குக் கடற்கரையை ஒட்டியே பெரும்பாலும் பயணிப்பதால் இந்த ரயிலுக்கு ‘கோரமண்டல் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜூன் 2, 2023 வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம், பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகில் விபத்தில் சிக்கியது. யஷ்வந்த்பூர்-ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் இந்த விபத்தில் சிக்கின.
இந்தியாவை உலுக்கிய மிகக் கோரமான ரயில் விபத்தாக இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதுவரையில் 261 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 900 மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான முதற்கட்ட விசாரணையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸுக்கு பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டு, பின் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியிருக்கிறது. அதன்பின் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தடம்புரண்டு, மெயின் லைனில் விழுந்ததால், யஷ்வந்த்பூர்- ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயிலும் விபத்தில் சிக்கியுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான காரணங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாக இருக்கும் சமயத்தில், தன்னிச்சையாகவே ரயிலின் வேகத்தைக் குறைத்து, விபத்தைத் தவிர்க்கும் `கவாச் தொழில்நுட்பம்’ கோரமண்டல் பாதையில் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
`ரயில்வே சார்பில், உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. மற்றும் `மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சத்தை இழப்பீடாக மாநில அரசு வழங்கும்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
`ரயில் விபத்தில் இறந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்கப்படும்’ என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் அதிகாரி ஒருவர், அந்தக் காலத்திலிருந்தே கோரமண்டல் ரயிலில் அடிக்கடி பயணித்த அனுபவமுள்ளவர். அவரிடம் பேசியபோது, “அப்போதெல்லாம், மேற்கு வங்கத்திலிருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்குப் பயணிப்பவர்கள் அதிகம். அவர்கள் பெரும்பாலும் இந்த கோரமண்டல் ரயிலில்தான் பயணிப்பார்கள். அதனால், இதை ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ்’ என்றே பெரும்பாலும் மக்கள் அழைப்பார்கள். சென்ட்ரலில் இறங்கி, வேலூருக்கு வேறு ரயிலில் பயணிப்பார்கள்.
இந்த ரயில், கிட்டத்தட்ட 24 மணி நேர பயணத்தில் சென்னை-கொல்கத்தாவை இணைத்துவிடும் என்பதால், இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் உண்டு.
ஆரம்பத்தில், நான்கு நிறுத்தங்கள் மட்டுமே இருந்தன. காலப்போக்கில் 15 நிறுத்தங்கள் வரை உருவாகிவிட்டன. இந்த ரயில் முக்கியமான ரயில்களில் ஒன்று என்பதால், எத்தகைய தடை ஏற்பட்டாலும் ரயிலை ரத்து செய்யாமல், சுற்றுவழியிலாவது குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள். அதேபோல, அனைத்து வசதிகளும் அப்போது சிறப்பாக இருக்கும். உணவும் தரமாக இருக்கும். முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ரயிலின் தரம் மட்டுமல்ல, உணவின் தரமும் தற்போது குறைந்திருக்கிறது” என்று சொன்னவர்,
”பழைய பயணி என்கிற வகையில் இந்த விபத்து சம்பவம் என்னை மிகவும் பாதித்திருக்கிறது’’ என கவலை பொங்கச் சொன்னார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் களத்தில் மீட்பு பணியில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும் பலம் கிடைக்கட்டும்!