ராமநாதபுரம் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்துருவின் உறவினரான ஆர்.எஸ்.மடையை சேர்ந்த கொக்கி குமார் என்பவர் பழிவாங்குவதற்காக அசோக்குமாரை தேடிய வந்துள்ளார். இந்த நிலையில் சந்துரு தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் விசாரணைக்காக அசோக்குமார் இன்று காலை வந்துள்ளார்.
நீதிமன்ற காத்திருப்போர் அறையில் அசோக்குமார் அமர்ந்திருந்த நிலையில் அங்கு வந்த கொக்கி குமார், அசோக்குமாரை அறிவாலால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய அசோக்குமார் நீதிமன்றத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளார்.
அங்கேயும் துரத்தி சென்ற கொக்கி குமார் நீதிமன்றத்திற்கு உள்ளேயே வைத்து அசோக்குமாரின் தலை கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் அசோக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிய, கொக்கி குமார் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் நீதிமன்றத்தில் வெட்டுப்பட்டு கிடந்த அசோக்குமாரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திற்குளேயே வைத்து ரவுடி ஒருவரை மற்றொரு ரவுடி வெட்டிய சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள கொக்கி குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். கொக்கி குமார் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது.
தலைமறைவான கொக்கி குமார் உச்சிப்புளி அருகே பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் கொக்கி குமாரை முழங்காலுக்கு கீழ் சுட்டு பிடித்தனர். தற்போது கொக்கி குமாரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் நீதிமன்ற வளாகத்தில் வெட்டு மற்றும் குற்றவாளியை துப்பாக்கியால் துட்டு பிடித்த சம்பவங்கள் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.