புவனேஸ்வர்:
இந்தியாவையே உலுக்கியுள்ள கோரமண்டல் ரயில் விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. ஒரு சிக்னல் தவறாக காட்டப்பட்டதே இந்த விபத்துக்கும், 261 பேரின் உயிர் போவதற்கும் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. யாருடைய அலட்சியத்தால் இந்த தவறு நடந்தது என்பது குறித்து தற்போது ரயில்வே போலீஸாரும், அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் இரவை ஒரு கொடிய இரவு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கோர விபத்தில் சிக்கியது. ஒடிசாவின் பாலசோர் ஸ்டேஷனில் எப்போதும் போல 5 நிமிடங்கள் நின்றுவிட்டு ரயில் கிளம்பியது.
அப்போது பஹனபஜார் பகுதி அருகே மணிக்கு சுமார் 127 கி.மீ. வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயில் இதன் மீது பயங்கர வேகத்தில் மோதியது.
தலைவிதியை மாற்றிய இரவு:
இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. என்ன நடந்தது என்பதை அந்தப் பெட்டியில் உள்ள பயணிகள் சுதாரிப்பதற்குள்ளாக பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பெட்டிகள் மீது மோதியது. இதில் அந்த பெட்டிகள் நசுங்கின. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு தீயணைப்புப் படையினர் சென்று மீட்புப் படையில் ஈடுபட்டனர்.
பலி எண்ணிக்கை உயர்வு:
இதில் தற்போது வரை 261 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 600-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இறந்தவர்களிலும், காயமடைந்தவர்களிலும் பல தமிழர்கள் இருக்கின்றனர். இதுவரை 35 தமிழர்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவறான பச்சை சிக்னல்:
இந்நிலையில்தான், இந்த கோர விபத்து எப்படி நடந்ததது என்று தெரியவந்திருக்கிறது. அதாவது கோரமண்டல் ரயில் பாலாசோர் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பஹனபஜாருக்கு முன்பாக உள்ள வனப்பகுதி அருகே ஆளில்லா சிக்னலில் பச்சை சிக்னல் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நொடிகளிலேயே அந்த பச்சை சிக்னல் சிகப்பு சிக்னலாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரயில் இன்ஜினில் இருக்கும் டிரைவர் பார்க்கும் போது அதில் பச்சை சிக்னல் இருந்திருக்கிறது.
ஒருசில நொடிகள்தான்:
இதனால் அவர் ரயிலை வேகமாக இயக்கி சென்றிருக்கிறார். அப்போதுதான் எதிரே வந்த சரக்கு ரயிலும், கோரமண்டல் ரயிலும் ஒன்றோடு ஒன்று மோதி இருக்கின்றன. அதாவது, அந்த சிக்னலில் சிகப்பு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி இருப்பார். அந்த நேரத்தில் சரக்கு ரயில் வேறு டிராக்கில் சென்றிருக்கும். ஆனால் சில நொடிகள் காட்டப்பட்ட பச்சை சிக்னலால் தான் இந்த பயங்கர விபத்து நேரிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அலட்சியத்தின் விலை மரணம்:
எப்படி அந்த நேரத்தில் பச்சை சிக்னல் காட்டப்பட்டது. பச்சை சிக்னலை வேண்டுமென்றே யாரேனும் போட்டு விட்டார்களா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து ரயில்வே போலீஸாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சில நொடிகள் ஏற்பட்ட தவறால் இன்று 261 பேர் இறந்திருக்கிறார்கள். பலர் தங்களின் அன்பு குழந்தைகள், கணவன், மனைவியை இழந்து பரிதவித்து கொண்டு இருக்கிறார்கள்.