வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் சிறையில் இருந்து, 200 இந்திய மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மூவரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, நம் மீனவர்களை அந்நாட்டின் கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர்.
இதையடுத்து, அங்குள்ள சிறைகளில் நம் மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அவர்களை விடுவிக்க மத்திய அரசு துாதரக ரீதியில் பேச்சு நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் சிறையில் இருந்த 198 இந்திய மீனவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டு, பஞ்சாபின் வாகா எல்லையில் நம் நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன் இரண்டாம் கட்டமாக, மேலும் 200 இந்திய மீனவர்களுடன், பொதுமக்கள் மூன்று பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘மனிதாபிமான அடிப்படையிலான விஷயங்களை அரசியலாக்கக் கூடாது என்கிற ரீதியில் எங்கள் நாடு செயல்படுகிறது.
‘எனவே, இந்திய மீனவர்கள் விடுதலையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
நம் மீனவர்கள் அனைவரையும், பஞ்சாபின் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement