சென்னை : நாட்டையே நடுங்க வைத்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அருண் விஜய், ஆத்மிகா, சால்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் என 3 ரயில்களும் மோதி விபத்தில் சிக்கின.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளது.
கோர விபத்து : ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதால், பணி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளார். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்ல இருக்கிறார்.
அருண் விஜய் : இந்த பயங்கரமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், கோரமண்டலில் ரயில் விபத்துச் செய்தியால் நான் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன். இத்தகைய துயரமான முறையில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
வேதனை அடைந்தேன் : அதே போல நடிகை ஆத்மிகா இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், ஒரிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் 233 பேர் பலியாகியதைக் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை என பதிவிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமான விபத்து : சல்மான் கான் தனது ட்விட்டர் பதிவில், விபத்தை அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது, கடவுள் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும், இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்களைக் காப்பாற்றி வலிமை அளிக்கட்டும்.
இக்கட்டான நேரம் : அக்ஷய் குமார் ட்விட்டரில், ஒடிசாவில் நடந்த சோகமான ரயில் விபத்தின் காட்சிகளைப் பார்க்கும்போது இதயம் உடைகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.