பாலசோர்: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டதில் நிகழ்ந்த தவறு காரணமாகவே ரயில் விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஆகியவை நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 747 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் குழு முதற்கட்ட விசாரணை மேற்கொண்டது. அதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முதலில் சிக்னல் கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு திரும்பப் பெறப்பட்டதாகவும் இதன் காரணமாகவே விபத்து நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சிக்னல் கொடுக்கப்பட்டதை அடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இணைப்பு தடத்தில் சென்று சரக்கு வாகனத்தின் மீது மோதி தடம் புரண்டுள்ளது. தடம் புரண்ட ரயிலின் பெட்டிகள் பிரதான ரயில் தடத்தின் மீது விழுந்துள்ளன. அந்தத் தடத்தில் வந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், பிரதான தடத்தின் மீது இருந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது” என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிக்னல் கொடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டதன் காரணம் அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. இணைப்பு தடத்துக்குள் நுழைந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டதும், சில கவிழ்ந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இன்று (ஜூன் 3) மாலை நிலவரப்படி 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 747 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 56 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
பிரதமர் நேரில் ஆய்வு: ஒடிசா ரயில் விபத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்லியில் இருந்து புறப்பட்டு ஒடிசா வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பிரதமரை விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், விபத்துக்கான காரணம் குறித்தும் பாதிப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் விளக்கினர்.
இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்றார். அங்கு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். அதோடு, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.