சென்னை: கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் பல்டி அடித்து தண்டம் புரண்டதாகவும், ஒரு சிலர் உடல் உறுப்புகள் சிதறி மரணம் அடைந்தாகவும் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்து உயிர் பிழைத்த பயணி ஒருவர் தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் அங்கு விபத்துக்குள்ளானது.
மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் உயிர் தப்பிய ஒரு சிலர் விமானம் மூலம் சென்னை வந்தனர். இவர்களில் ஆதிலட்சுமி என்ற மாணவி விபத்து குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். அவர் கூறுகையில், “நான் சென்னை லயோலா கல்லூரியில் படித்து வருகிறேன். இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக கொல்கத்தா சென்று இருந்தேன். திரும்பி வர கோரமண்டல் விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்து கொண்டு இருந்தேன்.
இந்தப் பயணத்தின்போது, நேற்று இரவு 7 மணிக்குதான் இந்த விபத்து நடந்தது. நான் பி8 பெட்டியில் இருந்தேன். எங்களின் பெட்டியில் பெரிய சேதம் இல்லை. விபத்து ஏற்பட்டவுடன் எங்களது பெட்டியில் இருந்த பலர் நிலை தடுமாறி விழுந்தனர். இதன் காரணமாக பலருக்கு காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ரயில் நின்றுவிட்டது. நான் இறங்கி சென்று பார்த்தபோதுதான் ரயில் தடம் புரண்டு இருப்பது தெரியவந்தது.
பி6 பெட்டிக்கு அடுத்த உள்ள பெட்டிகளில் பெரிய பாதிப்பு இல்லை. பி6 பெட்டிக்கு முன்னதாக உள்ள பெட்டிகள் பல்டி அடுத்து சாயந்து இருந்தது. இன்ஜின் தொடங்கி, முன்பதிவு செய்யாத பெட்டிகள், படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் அனைத்தும் தரம் புரண்டு இருந்தன. நான் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தபோது அருகில் உள்ள தண்டவாளத்தில் ஒரு ரயில் சென்று கொண்டு இருந்தது. விபத்து நடந்து 15 நிமிடம் கழித்துதான் ஆம்புலன்ஸ் வந்தது.
முன்பதிவு செய்யாத பெட்டிகளில் அதிகம் பேர் பயணித்தனர். அவர்களில் பலருக்கு 17 முதல் 30 வயது வரைதான் இருக்கும். நான் நடந்து சென்று பார்த்தபோது ஒருவர் அழுது கொண்டு இருந்தார். அவரிடம் பேசியபோது, உடன் வந்தவர் இறந்து விட்டதாக கூறினார். உடல் உறுப்புகள் வெளியே வந்து அவர் இறந்துவிட்டதாக கூறினார். விபத்து ஏற்பட்டு 2 மணி வரை நேரம் அங்குதான் இருந்தோம். இதன்பிறகு பேருந்து மூலம் புவனேஸ்வர் வந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளோம்” என்று அவர் கூறினார்.