புதுடில்லி, ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பயணியர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படாததால், அதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த விபத்து குறித்து காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “ரயில் விபத்து நாடு முழுதும் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
”இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரைக் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தாலும், இப்போது மீட்புப் பணியும், நிவாரணமும் தான் முக்கியம்,” என்றார்.
காங்., கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா வெளியிட்டுள்ள செய்தியில், “ரயில் விபத்து மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,” என தெரிவித்து உள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ள மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, விபத்து நடந்த பகுதியில் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்தான இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்குப் பின்னால் ஏதும் சதி வேலை இருக்கிறதா என்பது குறித்த உண்மை வெளிவர வேண்டும்,” என்றார்.
“மத்திய பா.ஜ., அரசு ரயில்வே துறையை சீரழித்து விட்டது. மிகப்பெரிய அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடந்துள்ளது.
”இதில் ஏராளமானோர் பலியான நிலையில், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்,” என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை, இந்திய கம்யூனிஸ்ட், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்