புதுடில்லி: 261 பேர் உயிர் போக காரணமான ரயில் விபத்திற்கு காரணம் மனிதத்தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை 6:50 மணி முதல் 7:10 மணிக்குள் 3 ரயில்கள் மோதிக்கொண்டன. அதில், ரயில்பெட்டிகள் சிதைந்ததுடன், ஒரு சில பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று விழுந்தன. பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்னர், நீண்ட உயரத்திற்கு தூக்கி செல்லப்பட்டது. இந்த விபத்தில் 17 பெட்டிகள் மோசமாக சேதம் அடைந்துள்ளன. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ஷாலிமர் ரயில் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தொழில்நுட்ப கோளாறா அல்லது மனிதத் தவறு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிக்னல் கோளாறுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ரயில்கள் மோதுவதை தடுக்கும் கவாச் கருவியை நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் பொருத்தும் நடவடிக்கைகளில் ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. இந்த கருவி, ஒரே தண்டவாளத்தில் வரும் போது டிரைவரை எச்சரிக்கும். இதன் மூலம் ஒரே பாதையில் இன்னொரு ரயில் வரும் போது, ரயில் பிரேக்குகளை டிரைவர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ரயிலை நிறுத்த உதவும்.
ஆனால், விபத்து நடந்த பாதைகளில் இந்த கவாச் கருவி பொருத்தப்படவில்லை என ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த விபத்தில் கோரமண்டல் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலின் தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டி மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement