சென்னை: சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 233 பேர் பலியாகி உள்ளனர்.
சமீப காலமாக ரயில் விபத்துக்கள் பெரிதும் தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு நடந்த இந்த கோர விபத்து பல உயிர்களை பலி வாங்கி உள்ளது நாட்டையே உலுக்கியுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலர் தங்களது அதிர்ச்சியை பதிவிட்டு வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து இந்த விபத்துக் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
233 பேர் பலி: கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 233 பேர் பலியாகி உள்ளனர். இரவு முழுவதும் ரயில் பெட்டிகளில் இருந்து சடலங்களை மீட்க பொதுமக்களும் போலீஸார், தீயணைப்பு துறையினர் என பலரும் போராடி வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய பேரதிர்ச்சி: சமீப காலமாக ரயில் விபத்துக்கள் இல்லாத அளவுக்கு ரயில்வே துறை கட்டுக்கோப்பாக பல தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பாக செயல்பட்டு வந்த நிலையில், திடீரென இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருப்பது நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பித்தவர்கள் கதறியபடியே அளித்து வரும் பேட்டிகளும் மக்களை உறைய வைத்துள்ளன.
வைரமுத்து உருக்கம்: இதுவரை 233 பேர் பலியாகி உள்ளனர் என்பதை அறிந்த பாடலாசிரியர் வைரமுத்து காலை எழுந்ததும் இப்படியொரு பேரதிர்ச்சி செய்தியை கேட்டு மிகவும் மனம் வாடிப் போயுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.
விடுதலை படத்தின் ரயில் விபத்து காட்சி: சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்த விடுதலை படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த ரயில் விபத்துக் காட்சியே தியேட்டரில் படத்தை பார்த்த ரசிகர்களை இதயம் கனக்க செய்த நிலையில், அதை விட கொடூரமான ரயில் விபத்து தற்போது நிகழ்ந்து இருப்பது ஒட்டுமொத்த இந்தியர்களையும் மரண வேதனையில் ஆழ்த்தி உள்ளது.