ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி மற்றும் டோலிவுட் ஹீரோ வருண் தேஜ் நிச்சயதார்த்தம் வரும் ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பிரம்மன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி.
மாயவன் படத்தில் ஹீரோயினாக நடித்த அவர் இந்த ஆண்டு வெளியாக உள்ள தணல் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
நடிகர் வருண் தேஜ்: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகேந்திர பாபுவின் மகன் தான் வருண் தேஜ். டோலிவுட்டில் இளம் நடிகராக வலம் வரும் வருண் தேஜ் நடிகை லாவண்யா திரிபாதி உடன் ஒரு சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
2 படங்களில் இணைந்து நடித்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், தற்போது அது கல்யாணத்தை நோக்கி வேகமாக நகர்ந்து உள்ளது. 2000ம் ஆண்டு வெளியான ஹேண்ட்ஸ் அப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வருண் தேஜ் அதன் பின்னர் 2014ல் வெளியான முகுந்தா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
லோஃபர், ஃபிடா, தோலி பிரேமா, அலாதீன், கனி, F2 மற்றும் F3 உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளார் ரவி தேஜ்.
சசிகுமார் ஜோடி: 2012ல் தெலுங்கில் வெளியான அண்டால ராக்சஷி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லாவண்யா திரிபாதி 2014ல் இயக்குநர் சாக்ரட்டீஸ் இயக்கத்தில் சசிகுமார், சந்தானம் நடித்த பிரம்மன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழில் நடித்தார். அதன் பின்னர் த்ரில்லர் படமான மாயவன் படத்திலும் நடித்துள்ளார்.
மிஸ்டர் மற்றும் அந்தாரிக்ஷம் 9000 கி.மீ., உள்ளிட்ட படங்களில் வருண் தேஜ் உடன் இணைந்து நடித்துள்ள நிலையில், இருவருக்கும் இடையே காதல் உருவானது. பல இடங்களுக்கு இருவரும் டேட்டிங் சென்று வந்த நிலையில், காதல் ஜோடிகள் என கிசுகிசுக்கப்பட்டனர். பின்னர், வெளிப்படையாகவே தங்கள் காதலை இருவரும் அறிவித்தனர்.
விரைவில் டும் டும் டும்: வரும் ஜூன் 9ம் தேதி நடிகர் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி இருவருக்கும் பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. குடும்ப உறவினர்கள் மற்றும் குறிப்பிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிச்சயதார்த்தின் போது, திருமண நாள் குறித்த தேதி அறிவிக்கப்படலாம் என்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி திருமணம் செய்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.