WTC Final 2023: வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இந்திய அணி நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இல்லாதது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். ரிஷப் பந்த் கடந்த ஆண்டு இறுதியில், கார் விபத்தில் சிக்கினார். அதில், இருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
அவர் இல்லாத இந்த நிலையில், இளம் வீரர் இஷான் கிஷான், கேஎஸ் பாரத் ஆகியோர் விக்கெட் கீப்பிங் பேட்டராக செயல்பட வேண்டியுள்ளது. அந்த வகையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தேர்வு குறித்து மூத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கேஎஸ் பாரத்க்கு பதிலாக விருத்திமான் சாஹாவை விக்கெட் கீப்பராக தேர்வு செய்திருந்திருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
“இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. கே.எஸ். பாரத் இப்போது இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். விருத்திமான் சாஹாவாக இருந்தால், நான் ஓகே என்று சொல்வேன். அவரை விளையாட வைக்கலாம். அவருக்கு அதிக அனுபவம் உள்ளது. அவர் சிறந்த கீப்பர். கே.எல். ராகுல் உடல்தகுதியுடன் இருந்தால், கேஎஸ் பாரத் இடத்தில் அவரை விளையாட வைத்திருப்பேன்” என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய சாஹா, கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சாஹா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட அழைக்கப்படுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால், இஷான் கிஷனை தான் தேர்வுக்குழு செய்துள்ளது.
ரிஷப் பந்தின் இடத்திற்கு இளம் வீரர் ஒருவர் வேண்டும் என அவர்கள் நினைப்பதால், இனி தேசிய அணியில் தான் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று சாஹா கடந்த ஆண்டு மறைமுகமான கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, 39 வயதான சாஹா ரிஷப் பந்திற்கு மாற்று வீரராக களமிறங்க வாய்ப்பில்லை என தெரிந்தது.
இந்திய அணியின் ஸ்குவாட்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத் (விக்கட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).
காத்திருப்பு வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்.