பாஜக ஆட்சியில் தான் மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டதாகவும், இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி தெரிவிக்கையில், “காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை காவிரி ஆற்று நீர் நம் உயிரும் மூச்சு. காவிரி நதி தோன்றியதிலிருந்து தமிழகத்திற்கு தான் அதன் பலனும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜகவினர், தமிழக காங்கிரசை விமர்சித்து பேசி இருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோதுதான் அன்றைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மேகதாது அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்.
அப்போது ஏன் தமிழக பாஜக எதிர்க்கவில்லை. நாங்கள்தான் எதிர்த்து குரல் கொடுத்தோம். கடந்த 2017 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்ட விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய நீர்வலைத் துறை அமைச்சகம் அனுமதி அளித்ததும் இந்த விவகாரத்தில் முக்கியமானது.
இது மட்டுமல்லாமல் 2018 நவம்பர் மாதம் மேகதாது அணை கட்ட சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்ததும் இதே பாஜக அரசு தான். இதற்காக தமிழக பாஜக தமிழக பாஜகவும், அண்ணாமலையும் தமிழக மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.