காந்திநகர்:
ஒடிசாவில் நேரிட்ட பயங்கர ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சூப்பர் அறிவிப்பை தொழிலதிபர் அதானி வெளியிட்டு இருக்கிறார்.
ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் பேரதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 295 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பலர் தங்கள் கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக, பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இந்த விபத்தில் பறிகொடுத்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு வரை தங்கள் பெற்றோரின் அரவணைப்பில் இருந்த குழந்தைகள் தற்போது நிர்கதியாக நிற்கின்றனர்.
இந்நிலையில்தான், இந்தியாவின் பிரபல தொழிலதிபர் கெளதம் அதானி ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஒடிசா ரயில் விபத்தால் மிகுந்த வேதனை அடைந்திருக்கிறோம். இந்த கோர விபத்தில் தங்கள் பெற்றோரை இழந்து வாடும் அப்பாவி குழந்தைகளின் கல்விச் செலவை அதானி குழுமமே ஏற்கும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டியதும், அவர்களின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதும் நமது அனைவரின் பொறுப்பு” என கெளதம் அதானி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான குழுமம் மிகப்பெரிய பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தையும் கெளதம் அதானி இழந்தது குறிப்பிடத்தக்கது.