ஜூன் 2, 2023 இரவு சுமார் 7 மணி. ஷாலிமர் டூ சென்னை சென்ட்ரல் வரை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்டு ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முதல் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது தண்டவாளத்தில் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு சரக்கு ரயில் மீது மோதி பெட்டிகள் சிதறின.
ஒடிசா ரயில் விபத்து குறித்து தகவல்கள்
மூன்று ரயில்கள் ஒரே விபத்து
அடுத்த சில நிமிடங்களில் பெங்களூருவில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் எதிர் திசையில் மூன்றாவது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது. இது ஏற்கனவே விபத்தில் தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இதில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் சேதத்திற்கு ஆளாகின. இதனால் பயணிகள் தூக்கி வீசப்பட்டும், இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தனர்.
ஒடிசா பாலசோரில் அதிர்ச்சி
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி 288 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. 900க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளில் பார்க்காத மிகப்பெரிய ரயில் விபத்தாக இது பார்க்கப்படுகிறது. நேற்று மாலையுடன் மீட்பு பணிகள் முடிவடைந்த நிலையில், உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகள் அகற்றும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழகப் பயணிகளுக்கு சோகம்
இதில் தமிழகத்தை பலர் பயணம் செய்தனர். அவர்களில் எத்தனை பேர் பலியாகினர். எத்தனை பேருக்கு பலத்த காயம், எத்தனை பேருக்கு லேசான காயம் என ஆராய்ந்து அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் காயமடைந்த தமிழகப் பயணிகள் உடன் சிறப்பு ரயில் ஒன்று ஒடிசாவில் நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது.
சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு
இவர்கள் அனைவருக்கும் தனி கவனம் செலுத்தி உரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் கோரமண்டல் ரயில் விபத்தில் இருந்து காயங்களுடன் உயிர் தப்பிய அனீஷ் குமார் பேசுகையில், நான் ஒரு ராணுவ வீரன். விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பதில் ஒரு மணி நேரம் பெரும் சிரமம் ஏற்பட்டது.
அனீஷ் குமார் வேதனை
என் கண் முன்னால் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். அவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அந்த ஒரு மணி நேரத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இதில் என்னுடைய ராணுவ ஐடி கார்டு, போன், லக்கேஜ் எல்லாம் போய்விட்டது. நான் உயிர் பிழைத்ததை பெரிதும் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
என் குழந்தையின் அன்பால் தான், நான் இப்படி மீண்டு வந்துள்ளேன். இல்லையெனில் வேற மாதிரி நடந்திருக்கும் என்று அனீஷ் குமார் தெரிவித்தார். இதேபோல் ஏராளமான பயணிகள் உயிர் பிழைத்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியூட்டும் விஷயமாக பார்க்கப்படுகிறது.