புவனேஸ்வர்:
நாட்டையே உலுக்கியுள்ள ஒடிசா ரயில் விபத்து ஒரு கிரிமினல் சதி என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியது. ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டமில்’ (Electronic Interlocking) மர்மநபர் வேண்டுமென்றே சில மாறுதல்களை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விபத்து என்று அனைவரும் நினைத்து வந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது. அந்த நேரம் பார்த்து, பெங்களூரில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி அதுவும் தடம்புரண்டு விழுந்தது.
இதில் மூன்று ரயில்களும் உருக்குலைந்துவிட, இரண்டு ரயில்களில் உள்ள பயணிகள் குத்துயிரும் கொலை உயிருமாக போராடிக் கொண்டிருந்தனர்.
பின்னர் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், இதுவரை 300 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்னர். 700-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸார் மற்றும் தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. முதல்கட்ட விசாரணையில், தவறாக கொடுக்கப்பட்ட பச்சை சிக்னலே இந்த விபத்து ஏற்பட காரணம் எனக் கூறப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் இவ்வாறு நடந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இப்போதுதான் இந்த விபத்துக்கு காரணம் தொழில்நுட்பக் கோளாறு அல்ல.. சதிவேலை தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவே உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து ஒடிசாவில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியதாவது:
ரயில்வே கமிஷனர் நடத்திய விசாரணையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கு காரணத்தை கண்டுபிடித்து விட்டோம். ரயில்வே டிராக்குகள் மாற்றப்படுவதற்கும், சிக்னல்கள் இயங்குவதற்கும் காரணமான எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் சிஸ்டமில் சில மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதுவும் சிலர் வேண்டுமென்றே இதை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முழு விசாரணை அறிக்கை விரைவில் கிடைத்துவிடும். அதன் பிறகு, இந்த கிரிமினல் சதியில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவரும். அதன் பிறகு மத்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.