உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலும், அலுவலக சார்ந்த பேச்சுகள் முதல் தொழில் சார்ந்த விஷயங்கள் வரை பிரைவசி தேடி செல்லும் கோடிக்கணக்கான சாமானியர்களின் புகலிடமாக இருப்பது டீ கடைகள்தான். அந்த டீ கடைகள் இப்போது பரந்து விரிந்து ரெஸ்டாரண்டுகளாக மாறியுள்ளது.
இங்கு ரியல் எஸ்டேட், பிசினஸ், அரசியல் சார்ந்த பெரிய பெரிய டீலிங்கும் நடக்கிறது. இந்த நிலையில், சென்னையில் முக்கியமான உணவகங்களில் சமீப நாட்களாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வகையில் பிரபலம் வாய்ந்த ஹோட்டலான அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஒன்றில் ‘ இங்கு அரசியல், ரியல் எஸ்டேட், மற்றும் வியாபாரம் பேச அனுமதி இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நண்பர்களுடன் இது போன்ற ஹோட்டல்களுக்கு செல்பவர்கள் எதைத்தான் பேசுவது என்றும் நாம் பேசுவதை ஊழியர்கள் கவனிப்பார்களோ என்றெல்லாம் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், பொதுவாக தென் மாவட்டங்களில்தான் இப்படி போஸ்டர்கள் ஓட்டுவார்கள். அங்குள்ள டீ கடைகளிலும், சலூன்களிலும் அரசியல் பேசக்கூடாது என்று எழுதப்பட்டிருக்கும். இப்போது சென்னை போன்ற முக்கிய நகரத்திலும் அந்த நடைமுறை வந்திருப்பது வியப்பாக உள்ளது. குறிப்பாக பெரிய உணவகத்தில் இதுபோன்ற உத்தரவு போடப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருப்பதாக சொல்கின்றனர்.
ஆனால், இப்படி போஸ்டர் ஒட்ட என்ன காரணம் என்று விசாரித்தபோது, ஒரு குழுவில் வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் இருப்பார்கள்.. அதேபோல மற்ற டேபிள்களில் இருப்பவர்களும் ஏதோவொரு கட்சியை சார்ந்து இருப்பார்கள்.
இந்த நிலையில் ஹோட்டலுக்குள் இருந்துகொண்டு வேறு கட்சியை பற்றி இழிவாக பேசும்போது அதை மற்றவர்களால் ஏற்க முடியாது. இதனால் வாடிக்கையாளர்களுக்குள் பிரச்சினை ஏற்படலாம் என்று கூறுகின்றனர். இதேபோல பிசினஸ், ரியல் எஸ்டேட்டும் பணம் செட்டில்மென்ட் அடங்கிய விஷயம் என்பதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரலாம் எனவே மேற்கண்ட மூன்று விஷயங்களை பேச அனுமதி இல்லை என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.