வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தை கண்டு என் மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் (ஜூன் 2) பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட ஷாலிமார் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 7 மணி அளவில் ஒடிசாவின் பாலசோர் – பத்ரக் ரயில் நிலையங்கள் இடையே பாஹாநாகா பஜார் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பிரதான தண்டவாளத்தில் இருந்து இணைப்பு தண்டவாளத்துக்கு ரயில் மாறியுள்ளது. இணைப்பு தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்குரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகி உள்ளனர். 1000 பேர் காயமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன், “இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தைக் கண்டு என் மனம் உடைந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும் என் பிரார்த்தனைகள் உடனிருக்கும்.
குடும்பம் – கலாச்சார ரீதியாக இந்தியா – அமெரிக்கா ஆழமான உறவைக் கொண்டுள்ளன. இவைதான் நம் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கின்றன. அமெரிக்கா முழுவதும் உள்ள மக்கள் இந்திய மக்களுடன் சேர்ந்து துக்கம் அனுசரிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.