நியூயார்க்: இனிவரும் தேர்தல்களில் பாஜகவை இந்திய மக்கள் வீழ்த்துவார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கான பயணங்களை முடித்துவிட்டு நியூயார்க் வந்தார் ராகுல் காந்தி. அவர் மான்ஹாட்டானில் உள்ள ஜாவிட்ஸ் மையத்தில் ஒரு பேரணியில் உரையாற்றுகிறார். அதற்கு முன்னதாக அவர் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த விருந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ” பாஜகவை எப்படி வீழ்த்த முடியும் என்பதை நாங்கள் கர்நாடகாவில் செய்து காட்டியுள்ளோம். அங்கு பாஜகவை படுதோல்வி அடையச் செய்தோம். அதை தோல்வி என்பதைவிட அழிவு என்று சொல்ல வேண்டும். பாஜகவை நாங்கள் அழித்தோம்.
கர்நாடக தேர்தலில் வெற்றி பெற பாஜக எல்லா முயற்சிகளையும் செய்தது. அவர்களிடம் அரசாங்கம் இருந்தது. பணம் இருந்தது. எல்லா அதிகாரமும் இருந்தது. ஊடகமும் இருந்தது. ஆனாலும் நாங்கள் அவர்களைத் தோற்கடித்தோம். அடுத்ததாக தெலங்கானாவில் அவர்களை தோற்கடிப்போம். அதன்பின்னர் தெலங்கானாவில் பாஜகவை காண்பது அரிதாகிவிடும்.
தெலங்கானாவில் மட்டுமல்லாமல் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலும் கர்நாடகாவில் பாஜகவுக்கு நடந்ததை திருப்பி நடத்துவோம்.
இதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. அது இந்தியாவின் புரிதலின் விளைவு. இந்தியா இப்போது ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டுள்ளது. பாஜக சமூகத்தில் பரப்பும் வெறுப்போடு முன்னே செல்லக்கூடாது எனப் புரிந்து கொண்டுள்ளது. அதனால் அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவின் அழிவு நடக்கப் போகிறது.
அதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துவிட்டன. நாங்கள் ஒரு சித்தாந்தப் போரை எதிர்கொள்ள உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருபுறம் பாஜகவின் பிரிவினைவாத சித்தாந்தம். மறுபுறம் அன்பும் பிரியமும் கொண்ட காங்கிரஸின் சித்தாந்தம்.
கர்நாடகாவில் பாஜக தேர்தல் வேளையில் இருவேறு சமூகங்கள் இடையே வெறுப்பைத் தூண்ட முயற்சித்தது. பிரதமரே அதற்கு முயற்சித்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை. கர்நாடகா மக்கள் இந்தத் தேர்தல் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் என்று நிரூபித்தனர்” என்றார்.