சென்னை:
சென்னையில் இன்று இரவு எப்படிப்பட்ட வானிலை நிலவும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய வார்னிங் கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடையின் உக்கிரம் பயங்கரமாக இருக்கிறது. மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே வெயிலின் அளவு படிப்படியாக அதிகரித்த நிலையில், தற்போது உச்சபட்ச வெப்பம் நிலவி வருகிறது. அத்தனைக்கும் கத்தரி வெயில் முடிந்த சூழலிலும், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அனலாய் கொதித்து வருகிறது.
குறிப்பாக, சென்னை, வேலூர், விழுப்புரம், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 104 டிகிரிக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதுவும் கடல் காற்றும் இல்லாமல் போனதால் சென்னையின் நிலைமை ஆக மோசமாக உள்ளது. ஏதோ குக்கருக்குள் இருப்பதை போல அனல் கொதித்து வருகிறது. நேற்றைய தினம் சென்னை 106 டிகிரியில் தகித்தது.
இந்நிலையில், சென்னையில் நிலவும் வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “இன்று மாலை 5.30 மணிக்கு கூட சென்னையில் 100 டிகிரி வெப்பம் நிலவியது. கடல் காற்று சிறிது கூட இல்லை. எனவே இன்று இரவு சென்னைக்கு ஒரு பயங்கரமான இரவாகவே இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.