விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் தமிழ் மாதங்களில் பங்குனி, சித்திரை, ஆடி மாதங்களில் சிறப்பு விழாக்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மாதந்தோறும் விளக்குப்பூஜை நடத்தப்படும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் சமீபத்தில் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து வைகாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இருக்கன்குடி கோயிலில் நேற்று விளக்குப்பூஜை நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வளர்மதி தலைமையில், கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்குப்பூஜை செய்தனர். பூஜையின்போது இருக்கன்குடி மாரியம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் துதி பாடல்கள் பாடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.