சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை 1500 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார்.
அன்னக்கிளி படத்தில் தொடங்கிய ராஜாவின் இசைப் பயணம் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது.
திரையிசையில் இளையராஜா செய்த சாதனைகளைப் போலவே அவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் உள்ளன.
இந்நிலையில், இளையராஜா உச்சத்தில் இருந்தபோது அவரால் சில இசையமைப்பாளர்கள் வாய்ப்புகளை இழந்ததாக சொல்லப்படுகிறது.
இளையராஜா கார்னர் செய்த இசையமைப்பாளர்கள்?
ஜூன் 2ம் தேதி தனது 80வது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜாவுக்கு ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். இப்போதும் படங்களுக்கு இசையமைத்து வருவதில் பிஸியாகவே காணப்படுகிறார் இளையராஜா. முக்கியமாக கடந்த மார்ச் மாதம் வெளியான விடுதலை படத்தில் இளையராஜாவின் இசை அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இளையராஜாவின் இசை சாதனைகள் குறித்து பலரும் பேசி வருவதைப் போலவே, அவரைப் பற்றி பல சர்ச்சையான செய்திகளும் அடிக்கடி வெளியாகின்றன. சமீபத்தில் கூட மனோபாலாவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்தது சர்ச்சையாகியிருந்தது.
அதேபோல், இளையராஜா உச்சத்தில் இருந்த நேரத்தில், இசையமைப்பாளராக அறிமுகமான சிலரை அவர் கார்னர் செய்ததாக சொல்லப்படுகிறது. அதாவது புதிய இசையமைப்பாளர்கள் பிரபலமாகிவிட்டால் தனக்கான வாய்ப்புகளும் அங்கீகாரமும் குறைந்துவிடும் என இளையராஜா அச்சத்தில் இருந்தாராம். அதனால், புதியவர்களை வளரவிடாமல் தடுத்ததாக பலவிதமான செய்திகள் உலா வருகின்றன.
அவர்களில் சந்திரபோஸ், எஸ்.ஏ ராஜ்குமார், தேனிசைத் தென்றால் தேவா, ஏஆர் ரஹ்மான் ஆகியோர் தான் இளையராஜாவின் ஹிட் லிஸ்ட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 1980களில் கொடிக்கட்டி பறந்த சந்திரபோஸ் 1990களுக்கு முன்பே வாய்ப்புகளை இழக்கத் தொடங்கிவிட்டார். அதேபோல், எஸ்.ஏ ராஜ்குமார், தேவா இருவருக்கும் இளையராஜாவால் வாய்ப்புகள் பறிபோனதாக கூறப்படுகிறது.
1992ல் ஏஆர் ரஹ்மான் அறிமுகமானபோதும் இளையராஜா அவரது வளர்ச்சியை விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஒருமுறை ஏஆர் ரஹ்மான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ஒரு இசைக்கருவியை இளையராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி கஸ்டம்ஸில் சிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனாலும் இளையராஜாவால் ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சியை தடுக்க முடியவே இல்லை.
ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சி தேவா, எஸ்.ஏ ராஜ்குமார் ஆகியோருக்கும் கை கொடுத்தது. அதன்பின்னர் அவர்களும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்தனர் என பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதேநேரம் இளையராஜா அப்படிப்பட்டவர் கிடையாது, திறமையை மட்டுமே நம்புகிறவர் என அவருடன் நெருங்கி பழகிய திரை பிரபலங்கள் கூறியுள்ளனர்.