கொல்கத்தா: ஒடிஷா ரயில்கள் விபத்தில் 294 பேர் பலியான பெருஞ்சோகம் தேசத்தை மட்டுமல்ல உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது.. ஆனால் இந்த துயரம் கொஞ்சமும் இல்லாமல் எரிகிற வீட்டில் கிடைத்தவரை லாபம் என்பதாக புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தாவில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு செல்லக் கூடிய விமான கட்டணங்களை பல மடங்கு உயர்த்திவிட்டன விமான நிறுவனங்கள்.
ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ச்ரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி 294 பேர் உயிரிழந்துள்ளனர். 900 பேர் வரையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகையே இந்த மிகப் பெரும் கோர விபத்து உலுக்கி எடுத்துள்ளது. பிரதமர் மோடி ஒடிஷா ரயில் விபத்து இடத்தை பார்வையிட்டார். தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்து, மறுசீரமைப்பு பணிகளும் முழுமை அடைந்து வருகின்றன.
ஒட்டுமொத்த உலகமும் இந்த துயரத்தில் பங்கேற்க, விமான நிறுவனங்கள் மட்டும் போட்டி போட்டுக் கொண்டு வசூல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. டெல்லி- புவனேஸ்வர் இடையேயான விமான கட்டணம் முன்பு ரூ6,000- ரூ7,000 எனில் இப்போது அதிகபட்சம் ரூ15,000 வரை பெறப்படுகிறது. ஒரே ஒரு நிறுத்தம் கொண்ட விமானங்களில் அதிஉச்சமாக ரூ25,000 வரை கூட கட்டணமாக பெற்றுள்ளனர். கொல்கத்தாவில் இருந்து விசாகப்பட்டினத்துக்காக டிக்கெட்டுகள் விலை ரூ5,000- ரூ6,000 எனில் இப்போது அதிகபட்சமாக ரூ14,000 வரை வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தா- விசாகப்பட்டினம்; கொல்கத்தா- ஹைதராபாத் நேரடி விமான சேவைகளில் இன்னமும் கூடுதல் கட்டணம் ரூ18,000 வரை பெறப்படுகிறது. தற்போதைய நிலையில் மிக குறைந்த கட்டணமே ரூ15,000 என்கின்றன விமான நிறுவனங்கள். கொல்கத்தா- சென்னை இடையே இன்று நேரடி விமான சேவை இல்லாத நிலையில் ரூ20,000 வரை விமான கட்டணங்களை செலுத்தி முன்பதிவு செய்துள்ளனர். இத்தகைய துயர நேரங்களில் எரிகிற வீடுகளில் கிடைத்த வரை லாபம் என சூறையாடுகிற விமான நிறுவனங்களின் போக்குகள் எப்போதுதான் மாறுமோ என்பது பொதுமக்களின் துயர குரல்.