ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பொது மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மைக் சரியாக வேலை செய்யாத கோபத்தில் மாவட்ட ஆட்சியரை நோக்கி அதனை முதல்வர் அசோக் கெலாட் வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சையாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருப்பதால் ஆட்சியை அக்கட்சி பறிகொடுக்கவே வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. சில கருத்து கணிப்புகளும் இதனை தெரிவித்துள்ளன.
இதனால் டெல்லி காங்கிரஸ் மேலிடமானது ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோரை அண்மையில் டெல்லிக்கு அழைத்து பேசியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கர்நாடகாவில் அனைத்து தலைவர்களும் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொண்டு வென்றது போல ராஜஸ்தானிலும் வெல்ல வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. முதல்வர் அசொக் கெலாட், கலகக்காரர் சச்சின் பைலட் இருவரும் இணைந்து செயல்படவும் ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. இந்த உற்சாகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் எனும் அறிவிப்பையும் அசோக் கெலாட் அறிவித்திருந்தார்.
இதனிடையே ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கெலாட் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் சில கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளிக்க கெலாட் மைக்கை எடுத்தார். ஆனால் மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் கடுப்பாகிப் போன கெலாட், மைக்கை அருகே இருந்த மாவட்ட ஆட்சியரை நோக்கி கடுப்பில் வீசி எறிந்தார். மைக்கை கெலாட் கடுப்பில் ஆட்சியரை நோக்கி வீசி எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது.