புதுடெல்லி: மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயில் வழித்தடப் பகுதிகளில் சிக்னல் அமைப்பிலுள்ள குறைபாடுகள் குறித்து தென்மேற்கு ரயில்வே மண்டல அதிகாரி எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.
சுமார் 275 உயிர்களை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம் ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் மாற்றம்’ காரணம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ள நிலையில், தென்மேற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமை இயக்க மேலாளர் சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்னரே எச்சரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் பிப்ரவரி மாதமே இன்டர்லாக் அமைப்பின் தோல்வி குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், பிப்ரவரி மாத 8 ஆம் தேதி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இம்மாதிரியான சிக்னல் சிக்கலை எதிர்கொண்டது. அப்போதே இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாதுகாப்பு மேலாண்மை அமைப்பில் சரியான சிக்னலில் ரயில் துவங்கிய பிறகு, பாதையில் மாற்றம் ஏற்படும் அமைப்பில் ( இன்டர்லாக்கிங்) கடுமையான குறைபாடுகள் இருப்பதை இந்த சம்பவம் சுட்டிக் காட்டியது. இது இன்டர்லாக்கிங்கின் சாராம்சம் மற்றும் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று கூறியிருக்கிறார். மேலும்,சிக்னல் பராமரிப்பு முறையை உடனடியாக கண்காணித்து சரி செய்யாவிட்டால், அது கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தெற்கு ரயில்வே, “அச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சிக்னல் கியர் பழுது/பராமரிப்பு பணியில் ஈடுபடும் போது, முறையான நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. உடனடியாக, நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி, தவறு செய்த ஊழியர்கள் மீது கடுமையான தண்டனையை வழங்கியது. ஒழுக்கம் மற்றும் மேல்முறையீட்டு விதிகளின்படி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
சிக்னல் குறைபாடுகள் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் முன்னரே எச்சரித்தும் அரசின் அலட்சியத்தால்தான் இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.