புதுடெல்லி,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ரஷிய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக தங்களது இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். அவர்களது இரங்கல் செய்திகளில் வெளிப்பட்ட அன்பான வார்த்தைகள், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மன வலிமையை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.