கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ரத்து: சிலைக்கு மட்டும் மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒடிசா ரயில்கள் விபத்து காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்தியா முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதையடுத்து கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் எம்எல்ஏ.க்கள் கருணாநிதி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர் அங்கே ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு தலைமைச் செயலர், அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏ.க்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நினைவிடங்களில் மரியாதை

அதன்பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏ.க்கள், திமுக நிர்வாகிகளும் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு, சென்னை சிஐடி நகரில் உள்ள கருணாநிதியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கோடம்பாக்கம் முரசொலி அலுவலகம் மற்றும் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் சமூக வலைப்பதிவில்,

‘‘ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகம் சனாதனப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாய் எழுந்து நின்றது. இந்த மண்ணுக்கான, மக்களுக்கான திராவிட இயக்கம் தோன்றியது. புத்தர் முதல் வள்ளலார் வரை இந்த மண்ணில் விதைத்த புரட்சியின் அடித்தளத்தில் திராவிட இயக்கம் வேரூன்றியது.

அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம்.நாயர், ஏ.பி.பாத்ரோ, எம்.சி.ராஜா, பனகல் அரசர், பெரியார், அண்ணா என தமிழினத்தின் இனமான, பகுத்தறிவு, சுயமரியாதை உணர்வைக் காத்திட உருவான தலைவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கருணாநிதி தலைமை தாங்கினார்.

எண்ணற்ற சமூகநலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர். தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் கருணாநிதியின் நூற்றாண்டு தொடங்கும் இந்நாளில், அவரது புகழைப் போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, நம் இயக்கஇலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

நிகழ்ச்சிகள் ரத்து

ஒடிசா ரயில்கள் விபத்து காரணமாக கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கி வைத்தல், கிண்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 150 மரக்கன்றுகள் நடுதல், புளியந்தோப்பில் நடைபெறவிருந்த கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், ‘கலைஞர் நினைவுகள்’ நூல் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் மற்றொரு நாளில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை திமுகவினர் கருணாநிதி உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி உருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், மக்களவை காங்கிரஸ் உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை யில், “கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளில் அவரது உழைப்பையும், சமூக நீதி சிந்தனையையும் நினைவுகூர்வோம். உழைப்புக்கு எடுத்துக்காட்டு அவர்தான். அவரது பிறந்தநாளில் அவரது சிறப்புகளை நினைவுகூர்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

— M.K.Stalin (@mkstalin) June 3, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.