பெங்களூரு: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய கர்நாடக பயணிகளை மீட்பதற்கும் உயிரிழந்தோரின் உடலை கர்நாடகா கொண்டு வருவதற்கும் அமைச்சர் சந்தோஷ் லாட் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தொலைபேசியில் பேசினேன். அம்மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தேன்.
விபத்தில் சிக்கிய கர்நாடக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தலைமையில் ஒரு குழு ஒடிசா சென்றுள்ளது. இந்தக் குழு விபத்தில் பாதிக்கப்பட்ட கர்நாடக பயணிகளுக்கு உதவும். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் இறந்தவர்களின் உடல்களை கர்நாடகா கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளேன்.
உதவி வழங்க உத்தரவு
ஒடிசா அதிகாரிகளிடம் கர்நாடக பயணிகளின் விவரங்களை அமைச்சர் சந்தோஷ் லாட் கேட்டுள்ளார் அவர்களை கண்டறிந்து பாதுகாப்பையும், தேவையான உதவிகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.