ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து, பரவலாக அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் கவச்…
இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சிப் பிரிவான RDSO தயாரித்துள்ள, ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பம் தான், “கவச்”….
ஒரே தண்டவாளத்தில் வரும் இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை தவிர்க்கவும், பனிக்காலத்தில் எதிரில் வரும் ரயில்கள் குறித்து எச்சரிக்கவும், ஆபத்துகாலத்தில், அபய குரல் எழுப்பி உதவி கோரும் வகையிலான SoS அமைப்பையும் உள்ளடக்கியது, இந்த கவச் தொழில் நுட்பம் ..!
சிக்னல்கள், தண்டவாளங்கள், கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்பமாக இந்த கவச் இயங்குகிறது..
இப்படியான இந்த “கவச்” நுட்பம், குறைந்தபட்சம் 380 மீட்டருக்கு அப்பால் வரும் ரயில்கள் குறித்தும், 3 கிலோ மீட்டர் சுற்றளவில், முன்னால் செல்லும், பின்னால் வரும் ரயில்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலோ, அல்லது, ஒரே தண்டவாளத்தில் ரயில்கள் வந்தாலோ, ஓட்டுநரை எச்சரிப்பதோடு, ஆபத்துகால உதவியை கோரவும் அறிவுறுத்தும் என்கிறார்கள், ரயில்வே அதிகாரிகள்….. சிக்னல்களை மீறினாலோ, எச்சரிக்கையை அந்த ரயில் ஓட்டுநர் மீறினாலோ, ஆட்டோமெட்டிக் பிரேக்கிங் சிஸ்டத்தை பயன்படுத்தி ரயிலை நிறுத்திவிடுமாம்…
கப்பல் அல்லது விமானத்தில் உள்ளது போல , அவசர காலங்களில் சமிக்ஞை அனுப்பும் SoS என்ற உதவி கோரும் செயல்முறையையும் தன்னகத்தே கொண்டுள்ளது, இந்த கவச் தொழில்நுட்பம்….
ஒருவேளை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் , யஸ்வந்த்பூர் விரைவு ரயில்களில் கவச் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டிருந்தால், கோர விபத்து தவிர்க்கப்பட்டிருக்குமா? என்ற கேள்விக்கு, ஒடிசா சம்பவத்தில், ரயில்கள் செல்ல கட்டுப்பாட்டறையில் இருந்து கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்ட நிலையில், கவச் தொழில் நுட்பம் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பில்லை என்றும் அமைதியாகவே இருந்திருக்க கூடும் என்கின்றனர் விபரம் அறிந்த ரயில்வே அதிகாரிகள்.