காளையார்கோவிலில் பாண்டியன் கோட்டையில் கீறல் குறியீடுகளுடன் பானை ஓடுகள் கண்டெடுப்பு

சிவகங்கை: சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காளையார்கோவிலில் உள்ள பாண்டியன் கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கீறல் குறியீடுகளுடன் பானை ஓடுகளை சிவகங்கை தொல்நடைக் குழுவினர் கண்டெடுத்தனர்.

இதுகுறித்து புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: புறநானூற்று பாடலில் இடம்பெற்ற சங்க இலக்கிய சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை காளையார்கோவிலில் உள்ளது. தற்போது பாண்டியன் கோட்டை சிதிலமடைந்த நிலையில், ஆழமான அகழி, நீராவி குளம் போன்றவை உள்ளன. இக்கோட்டை மேடு 37 ஏக்கர் பரப்பில் வட்ட வடிவில் அமைந்துள்ளது.

மேலும், இக்கோட்டையின் கிழக்கு பகுதியில் காவல் தெய்வமாக முனீஸ்வரர் கோயிலும், தெற்கு பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோயிலும் உள்ளன. பாண்டியன் கோட்டை பகுதியில் ஏற்கனவே சங்க கால செங்கல் எச்சங்கள், கூரை ஓடு எச்சங்கள், மண்ணால் ஆன உருண்டைகள், வட்டச் சில்லுகள், தமிழி எழுத்தில் பெயர் பொறித்த பானையோடு ஆகியன கிடைக்கப்பெற்றன.

தற்போது மூன்று பானை ஓட்டில் கீறல் குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்றில் ஆங்கில எழுத்து இசட் போன்றும், மற்றொன்றில் முக்கோண வடிவில் கீழே கால்கள் வரையப்பட்டதை போன்றும், மூன்றாவதில் மீன் அல்லது வில்லம்பின் முனை போன்றும் உள்ளது.

மேலும், அழுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழகான வேலைப்பாடுடைய பானைகளை வடிவமைத்துள்ளனர். ஒரு பானை ஓட்டின் மேற்பகுதியில் பாயை விரித்து வைத்தது போல் உள்ளது. இதுகுறித்து விரைவில் ஆய்வு நடத்தப்படும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.