ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்தில் சிக்கி ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகியவை அடங்கும். இந்த கோர விபத்தில் பலியான நபர்களின் எண்ணிக்கை 288 எனச் சொல்லப்படுகிறது. 900க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
ரயில் விபத்து என்ன நடந்தது?
கோரமண்டல் ரயில் விபத்து
நேற்று மாலை உடன் மீட்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. பிரதமர் மோடி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முதல் பல்வேறு மாநில பிரதிநிதிகள் வரை சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு வேண்டியதை செய்து தர அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் இருந்தும் சிறப்பு குழு ஒன்று முதலமைச்சர்
அறிவுறுத்தலின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு சிறப்பு ரயில்
70க்கும் மேற்பட்டோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அடையாளம் காணப்படாத 100 பேரின் உடல்கள் புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் விபத்தில் சிக்கிய ரயில்களில் பயணித்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்லவும், காயமடைந்த தமிழகப் பயணிகள் ஒடிசாவில் இருப்பவர்கள் சென்னை வந்து சேரவும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பயணிகள் உடன் சிறப்பு ரயில் மூலம் நேற்று காலை புவனேஷ்வர் நகரில் இருந்து சென்னை புறப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் வந்தது
இதில் 250 பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரயில் பிரம்மாபூர், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவக் குழுவினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகாமிட்டு பயணிகளுக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அமைச்சர்கள் நேரில் ஆய்வு
சென்னை சென்ட்ரலுக்கு நேரில் சென்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர். 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. 2 பேர் எக்ஸ்ரே எடுப்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
மு.க.ஸ்டாலின் தொடர் கண்காணிப்பு
கட்டுப்பாட்டு அறையில் வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையில் ஒடிசா சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழகத்தை சேர்ந்த அனைவரும் பாதுகாப்பான சென்னை வருவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.