கொல்கத்தா: ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், இரு ரயில்வே அதிகாரிகள் பேசியதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் ஒரு ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல் ஷாலிமாரில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருந்தது. ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் வந்த போது பயங்கர விபத்தில் சிக்கியது.
பெங்களூரில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த போது ரயில்கள் விபத்தில் சிக்கியதால் ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி சின்னாபின்னமாகின. இந்த விபத்தில் சிக்கிய 3 ரயில்களில் 2 ரயில்கள் பயணிகள் ரயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இந்த கோர விபத்தில் விபத்தில், இதுவரை மொத்தம் 275 பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்த ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இண்டெர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாறுபடே காரணம் என கண்டறியப்பட்டு இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். எனினும் ரயில் விபத்துக்கு மனித தவறு காரணமா? தொழில் நுட்ப கோளாறுதான் காரணமா? என பல்வேறு ஐயங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ரயில்வே அதிகாரிகள் பேசிக்கொண்டதாக ஒரு ஆடியோ வெளியிடப்பட்டது. தென்கிழக்கு ரயில்வேயின் துணை சிஎஸ்ஓ அசோக் அகர்வால் என்று தன்னை குறிப்பிடும் ஒருவர் மற்றொரு அதிகாரியிடம் என்று கூறப்படும் நபருடன் பேசுகிறார். உறுதி செய்யப்படாத இந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள உரையாடல் வருமாறு:-
போன் செய்தவர் (அதிகாரி என நம்பப்படும் நபர்) : ரயில் விபத்து பற்றி அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக வருகின்றன. கடைசியாக என்னதான் கூறினார்கள்.
அசோக் அகர்வால்: விபத்து நடந்த இடத்தில் மெயின் லைனிற்கு சிக்னல் வழங்கப்பட்டது. ஆனால் வண்டி லூப் லைனில் சென்றுள்ளது.
அதிகாரி: இது எப்படி சாத்தியம்!
அசோக் அகர்வால்: யாராவது கையாண்டு இருந்தால் இது சாத்தியம் தான்.
அதிகாரி: ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தார்களா?
அசோக் அகர்வால் : ஆமாம், சில வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சில குழப்பங்களும் நடந்து இருக்கலாம்… சிக்னல் மெயின் லைனுக்கு இருந்தது, ஆனால் ரயிலின் ஃபேசிங் பாயிண்ட் லூப் லைனுக்காக இருந்தது.
அதிகாரி: இதன் காரணமாகத்தான் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலில் மோதியதா?
அசோக் அகர்வால்: .. ஆமாம், இதனால் தான் கோரமண்டல் ரயில் சரக்கு ரயிலில் மோதியது, அதன் பின்னரே பெட்டிகளும் சிதறின.. சில பகுதிகள் 2864 (பெங்களூர் – ஹவ்ரா) ரயிலுடன் மோதியது. இவ்வாறு இந்த உரையாடல் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வரும் நிலையில், அக்கட்சியின் குணால் கோஷ் வெளியிட்டு இருக்கும் இந்த ஆடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.