புவனேஸ்வரம்: ஒடிஸா ரயில் விபத்து நடந்த ரயில் தண்டவாளத்தில் குழந்தைகள் பயன்படுத்திய ஓவிய புத்தகங்கள், பொம்மைகள், காதல் கடிதங்கள் சிதறி கிடந்த சம்பவம் மனதை உலுக்குகிறது.
பெங்களூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்றும் ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் தனித்தனி இடங்களில் விபத்தில் சிக்கியது.
இதில் நிறைய பெட்டிகள் சேதமடைந்தன. அவற்றில் 17 பெட்டிகள் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளான இந்த விபத்தில் இதுவரை 296 பேர் பலியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.
ஒடிஸா ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. ரயில் தண்டவாளத்தை சுற்றி நிறைய பொருட்கள் சிதறி கிடக்கின்றன. உடல்கள், உடல் பாகங்கள் சிதறி கிடந்த நிலையில் அவை மீட்கப்பட்டு வருகின்றன. அப்போது அந்த தண்டவாளத்தில் இருந்த பொருட்களை பார்த்த மீட்பு படையினருக்கு மனதை உலுக்கிய சம்பவங்கள் நடந்தன.
பெங்காலியில் ஒருவர் காதல் கடிதம் எழுதியிருந்தார். அதில் சிறிய மேகங்கள் மழையை உருவாக்கும், சிறிய கதைகள்தான் காதலை உருவாக்கும் என எழுதியிருந்தார். அந்த கவிதை எழுதப்பட்டிருந்த நோட்டு புத்தகம் யாருடையது என தெரியவில்லை. அதில் அந்த கவிதையை எழுதியவர் பெயரும் இல்லை. அது போல் அந்த கவிதையை யாருக்கு அவர் எழுதியுள்ளார் என்பதும் தெரியவில்லை.
அந்த காதல் கவிதையை தீட்டியவர் உயிருடன் இருக்கிறாரா என தெரியவில்லை. நிறைய பேரின் செருப்புகள் சிதறி கிடந்தன. நிறைய சூட்கேஸுகள், பைகள் திறந்து கிடந்தன. துணிகள் கிழிந்த நிலையிலும் ரத்தம் தோய்ந்த நிலையிலும் கிடந்தன. கைகள் உடைந்த நிலையில் பொம்மைகள் கிடந்தன.
அது போல் குழந்தைகள் வரைந்த ஓவியநோட்டு புத்தகங்களும் கிடந்தன. அதில் சிகப்பு, நீலம், பச்சை, ஊதா நிறங்களில் கலர் செய்யப்பட்டிருந்தன. செருப்புகள் ஒன்றுடன் ஒன்று ஜோடி இல்லாத நிலையில் குவிந்து கிடந்தன. இவற்றை பார்க்கும் போது மீட்பு படையினர் மனம் உருகினர். இந்த விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.