"செவ்வாய்தோஷம்".. பலாத்காரம் செய்த பெண்ணை மணமுடிக்க மறுத்த குற்றவாளி.. ஜோஷியம் பார்க்க நீதிமன்றம் உத்தரவு

லக்னோ:
தான் பலாத்காரம் செய்ய பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் அவரை திருமணம் செய்ய குற்றவாளி மறுத்த நிலையில், அப்பெண்ணுக்கு உண்மையிலேயே செவ்வாய் தோஷம் இருக்கிறதா என கண்டறிய ஜோதிடர்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் தீர்ப்புகளும், அவை போடும் உத்தரவுகளும் சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருவதை யாரும் மறுக்க முடியாது. நேற்று முன்தினம் கூட கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு பெரும் விமர்சனங்களை ஈர்த்தது. பெண்ணின் சடலத்துடன் உறவு கொள்வது குற்றம் ஆகாது என உத்தரவிட்டதுடன், இந்த செயலில் ஈடுபட்ட நபரையும் விடுவித்தது.

சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் உள்ள செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, பசு கோமியம் சர்வ நோய்களையும் குணப்படுத்தும் மருந்து என்றும், பசு சாணத்தை வீட்டில் பூசினால் அணுக்கதிர்வீச்சால் கூட ஊடுருவ முடியாது” எனவும் அறிவியலுக்கு முற்றிலும் முரணாக கருத்து தெரிவித்தார்.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் விசித்திரமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இளம்பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார். பின்னர், திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை பல முறை பலாத்காரமும் செய்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய போது, அந்த இளைஞர் மறுத்திருக்கிறார்.

.
https://tamil.samayam.com/latest-news/india-news/criminal-conspiracy-is-behind-the-odisha-train-accident-says-railway-minister-ashwini-vaishnav/articleshow/100743064.cms

இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பேரில், அந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது, நீதிபதி பிரிஜ் ராஜ் சிங் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஏன் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுக்கிறாய்?” என நீதிபதி அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர், அப்பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால்தான் திருமணம் செய்ய மறுப்பதாக கூறியுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் இதை கேட்ட நீதிபதி பிரிஜ் ராஜ் சிங், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உண்மையிலேயே செவ்வாய்தோஷம் இருக்கிறதா என்று கண்டறியுமாறு லக்னோ பல்கலைக்கழகத்தின் ஜோதிடத்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பான ஜோதிட அறிக்கையை 10 நாட்களுக்குள் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி அறிவுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.