ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவிப்பு

லண்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இதுவரை 103 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 8,158 ரன்கள் சேர்த்துள்ளார். 36 வயதான வார்னர் கடைசி 4 இன்னிங்சில் 10, 1, 10, 15 ரன் வீதம் எடுத்து சொதப்பினார். அதனால் அவர் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் ஜொலித்தால் தான் தொடர்ந்து வாய்ப்பு பெற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறார்.

இந்த நிலையில் டேவிட் வார்னர் நேற்று அளித்த பேட்டியில், ‘2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தான் நான் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். எனது திட்டமும் அது தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் சொந்த ஊரான சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டுடன் விடைபெற விரும்புகிறேன். ெடஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமாக சாதிக்கும் பட்சத்தில், அடுத்து வரும் பாகிஸ்தான் தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்.

இங்கு தொடர்ச்சியாக ரன் குவித்து, அதன் பிறகு ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கூட பாகிஸ்தான் தொடருக்கு அடுத்ததாக நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் நிச்சயம் விளையாடமாட்டேன். அதன் பிறகு வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவேன்.

ஒவ்வொரு போட்டியில் ஆடும் போதும், இது தான் நமது கடைசி போட்டி என்ற நினைப்பில் விளையாடுவேன். இது தான் எனது கிரிக்கெட் ஸ்டைல். இந்த அணியினருடன் அங்கம் வகிப்பதை மிகவும் விரும்புகிறேன். அவர்களுடன் உற்சாகமாக விளையாடுகிறேன். தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ், 50 ஓவர் உலக கோப்பை போட்டி என்று அடுத்து முக்கியமான போட்டிகள் வருகின்றன. அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன்.’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.