சென்னை: ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், நேற்று தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். ரயில் விபத்தில் இதுவரை தமிழர்கள் யாரும் உயிரிழக்கவோ, படுகாயம் அடையவோ இல்லை என்று ஒடிசாவில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, சென்ட்ரலில் உள்ள பயணிகள் உதவி மையம், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையம் ஆகிய இடங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்று, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், தொலைபேசியில் ஒடிசா தலைமைச் செயலரை தொடர்பு கொண்டு, மீட்பு பணி குறித்து கேட்டறிந்தார்.
தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, பொதுத் துறை செயலர் (பொறுப்பு) டி.ஜகந்நாதன், பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் எஸ்.ஏ.ராமன், தெற்கு ரயில்வே மண்டல துணை மேலாளர் கணேசன், துணை மேலாளர் (வணிகம்) அஸ்வின் உடன் இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
விபத்து குறித்து கேள்விப்பட்டதும், உடனடியாக ஜூன் 2-ம் தேதி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தொலைபேசியில் பேசினேன். மீட்பு பணியில் உதவி தேவைப்பட்டால் தமிழக அரசு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தேன்.
தமிழக இளைஞர் நலம், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை செயலர் குமார் ஜெயந்த், ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பாலசோர் பகுதியிலேயே இன்னும் நான்கைந்து நாட்கள் தங்கி, மீட்பு, நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய கூடுதல் டிஜிபிசந்தீப் மிட்டல் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களும் செல்கின்றனர்.
இன்று (ஜூன் 3) மறைந்த முன்னாள்முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் என்பதால், அவரது சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினோம். 3-ம் தேதி ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, 3-ம் தேதி நடக்க இருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
பிறகு, ஒடிசா சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட தமிழக குழுவினருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலியில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்ட விவரங்களை தெரிவித்த உதயநிதி,‘‘பாலசோரில் 4 இடங்களில் 237 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை அடையாளம் காணப்பட்ட 70 சடலங்களில் தமிழர் யாரும் இல்லை என ஆட்சியர் கூறியுள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதிலும் தமிழர்கள் இல்லை” என்றார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.