திருவள்ளூரில் குடிப்பதை தட்டி கேட்ட தாயை கொடூரமாக அடித்து மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூங்கா நகர் ஆவாரம் பூ தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா(50). இவருக்கு ராஜேஷ் (31) ரஞ்சித் (28) என்று 2 மகன்கள் உள்ளனர். இதில் எலக்ட்ரீசியன் ராஜேஷுக்கு திருமணமான நிலையில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வந்த ராஜேஷிடம், தாய் மஞ்சுளா சம்பாதிக்கிறதை எல்லாம் குடித்துவிட்டு வருகிறாயே என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ராஜேஷுக்கும், தாய் மஞ்சுளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் தாயை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து வலி தாங்க முடியாமல் மஞ்சுளா வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். இந்நிலையில் ராஜேஷ், வெளியில் நின்று கொண்டு என்னை அசிங்கப்படுத்துகிறாயே என்று கூறி, தாயை கழுத்தைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்து வந்து சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். பின்பு கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.
இதையடுத்து ராஜேஷ் போதை தெளிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராஜேஷின் தம்பி ரஞ்சித் உடனடியாக தாயை விட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே மஞ்சுளா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தாயை கொடூரமாக அடித்து கொன்ற ராஜேஷ் கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.