பாலசோர்: ஒடிசாவில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒட்டுமொத்த ரயிலும் குலுங்கி கவிழ்ந்ததாகவும், உடல் பாகங்கள் ரத்த வெள்ளத்தில் சிதறிகிடந்ததாகவும், உயிர் தப்பித்த பயணிகள் கூறினர்.
விபத்தை சந்தித்த கோரமண்டல்-ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில், பிஹாரைச் சேர்ந்த தின ஊதிய தொழிலாளி சஞ்சய் முகியா என்பவர் பயணம் செய்தார். ரயில் விபத்து குறித்து அவர் கூறுகையில், ‘‘நான் சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தேன். ரயில் மோதியபோது நான் கழிவறையில் இருந்தேன். திடீரென ஒட்டு மொத்த ரயிலும் பயங்கர சத்தத்துடன் அதிர்ந்து குலுங்கி கவிழ்ந்தது. உருக்குலைந்த ரயில் பெட்டியில் இருந்து சிறிது நேரத்தில் நாங்கள் மீட்கப்பட்டோம். வெளியே வந்து பார்த்தபோது, ரயில் பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கிடந்தன. பயணிகளின் உடைமைகள் எல்லாம் எங்கும் சிதறிக் கிடந்தன. உருக்குலைந்த ரயில் பெட்டியில் இருந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு அடுக்கி வைத்திருந்தனர். இவ்வாறு சஞ்சய் முகியா தெரிவித்தார்.
மற்றொரு பயணி ஒருவர் கூறுகையில், ‘‘ரயில் தடம்புரண்டபோது, நான் தூங்கிக் கொண்டிருந்தேன். என்மீது 10 முதல் 15 பேர் விழுந்தனர். நான் ரயில் பெட்டியை விட்டு வெளியே வந்தபோது, எங்கும் கை, கால்கள் சிதறிக் கிடந்தன. ஒருவரது முகம் உருக்குலைந்த நிலையில் இருந்தது’’ என்றார்.
முகமது அக்யூப் என்ற பயணி கூறுகையில், ‘‘நான் மிகப் பெரிய மாணவர்கள் குழுவுடன் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தேன். 3 பெட்டிகளில் நாங்கள் பயணம் செய்தோம். திடீரென பயங்கர மோதல் சத்தம் கேட்டது. ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்தன. நாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தோம். ரயில் பெட்டிகளின் ஜன்னல் வழியாக நாங்கள் மீட்கப்பட்டோம். இனி நாங்கள் எங்கும் செல்ல விரும்பவில்லை. எங்கள் சொந்த மாநிலமான பிஹாருக்கு திரும்புகிறோம்’’ என்றார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த அனுபவ் தாஸ் கூறுகையில், ‘‘ கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயில் மீது மோதியது போல் தெரிகிறது. இந்த விபத்தில் நானே 200 முதல் 250 பேருக்கும் மேற்பட்டவர்களின் மரணத்தை பார்த்தேன். பல குடும்பங்கள் இந்த விபத்தில் அழிந்துவிட்டன. கை, கால்கள் அற்ற உடல்கள் ரத்த வெள்ளத்தில் தண்டவாளத்தில் கிடக்கின்றன. இந்த காட்சியை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.