மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி
ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து விட்ட நிலையில் அந்தப்படத்தின் பிரமோஷன், விருதுகள் என பல பெருமையான நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் கடந்து வந்து விட்டார் இயக்குனர் ராஜமவுலி. அடுத்ததாக அவர் மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த படத்திற்கான கதையை உருவாக்கும் வேலைகளில் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் மோகன்லாலை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ராஜமவுலி முயற்சித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ராஜமவுலியை பொருத்தவரை மோகன்லாலின் தீவிர ரசிகர் என்பதை பலமுறை கூறியுள்ளார். ஜூனியர் என்டிஆரை வைத்து எமதொங்கா என்கிற படத்தை ராஜமவுலி இயக்கினாரே அந்த கதை மோகன்லாலுக்காக எழுதப்பட்டது தான். கிட்டத்தட்ட மோகன்லால் நடிப்பதாக உறுதி செய்யப்பட்டு பின் சில காரணங்களால் அது கைகூடாமல் போன நிலையில் தான் அந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடித்தார்.
அதன்பிறகு பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களில் எல்லாம் மோகன்லாலை நடிக்க வைக்க அவர் முயற்சி செய்தாலும் ஏனோ அது கைகூடாமல் போய்விட்டது. அதற்கு மோகன்லால் தொடர்ந்து பிஸியாக நடித்து வருவதும் ராஜமவுலி ஒரு படத்திற்கு வருடக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்வதும் கூட காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க உள்ள படத்திலாவது மோகன்லாலை நடிக்க வைத்து விட வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் ராஜமவுலி.