துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலையில் மந்தமாக நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த சாலையில் புழுதி பறப்பதாலும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய சாலையான ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றை இணைக்க துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை உள்ள பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமாக அமைந்துள்ளன. இப்பகுதி மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்த சாலையில் அதிக எண்ணிக்கையிலான வாகன புழக்கம் உள்ளது. இதனால் இந்த சாலையில் எப்போதும் வானக நெரிசல் காணப்படும். இதைக் கருத்தில் கொண்டு 4 வழிச்சாலையாக இருந்ததை அண்மையில் 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்டது.
இருப்பினும், துரைப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்கள், குடிநீர் விநியோக திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படாத நிலையில், கழிவுநீர் லாரிகளும், குடிநீர் லாரிகளும் இந்த சாலையில் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே துரைப்பாக்கம்- பல்லாவரம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சாலையில் தடுப்புகள் அமைத்திருப்பதால் சாலை குறுகியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும் மழைநீர் வடிகாலுக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது போடப்பட்ட மண், இந்த சாலையில் கிடப்பதால், வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இது வாகன ஓட்டிகளுக்கு சுவாச பிரச்சினை மற்றும் கண் எரிச்சனை ஏற்படுத்துகிறது. இதனால், அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் காலத்தோடு செல்ல முடியாமலும் பல்வேறு உபாதைகளுக்கும் ஆளாகின்றனர்.
இதுகுறித்து சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த எஸ்.ஆனந்த் கூறியதாவது: நான் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். காலை 10 மணிக்குள் நான் அலுவலகம் செல்ல வேண்டும். நெடுஞ்சாலைத் துறை காலத்தோடு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்காததால் தினமும் துரைப்பாக்கம் பகுதி யில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் புழுதி பறப்பதால் வானகங்களை இயக்கவே கடும் சிரமமாக உள்ளது. கோடையில் வெயிலின் தாக்கத்தாலும், நெரிசலில் சிக்கிய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையாலும் கடும் சுவாசக் கோளாறு ஏற்படும். எனவே இந்த மழைநீர் வடிகால் பணியை நெடுஞ்சாலைத்துறை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மழைநீர் வடிகால் பணி தாமதம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அளித்த விளக்கம் வருமாறு: துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலை 10.6 கிமீ நீளம் கொண்டது. மழை காலங்களில் பல்லாவரம் ஏரி நிரம்பி
உபரி நீர் கீழ்க்கட்டளை ஏரிக்கும், அதிலிருந்து உபரி நீர் நாராயணபுரம் ஏரிக்கும் அதிலிருந்து உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்கும் வர வேண்டும். நீர்வழித் தடங்களில் குடியிருப்புகள் அதிகரித்து
விட்டதால், மழை காலங்களில் மழைநீர் வழிந்தோட முறையான கால்வாய் வசதி இல்லாமல் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வெள்ளம் தேங்குவதாக புகார்கள் வந்தன.
அதைத் தடுக்கும் வகையில் முறையாக அனைத்து ஏரிகளின் கழிவுநீரும் நேரடியாக பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு கொண்டு செல்ல ஏதுவாக ரூ.110 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோக குழாய்களை பதிக்கும் பணிகள், மின்கம்பங்களை இடம் மாற்றுதல், மின் வழித்தடங்களை மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் முடிந்த பிறகே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க முடியும். சேவைத்துறைகளின் பணிகளை விரைந்து முடிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.