கணவன், மனைவியிடையே வருகிற சிறுசிறு வார்த்தை மீறல்கள்கூட, அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையைச் சிதைத்து விடலாம். அந்த வார்த்தை மீறல்கள் கோபத்தினால் மட்டுமல்ல, வாழ்க்கைத்துணையைக் கேலி பேசும் இயல்பினாலும் நிகழலாம். இதுபற்றி செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
“செக்ஸ் பற்றி பேசுகிற பெண்கள் ஒழுக்கமானவர்கள் கிடையாது என்கிற பொதுபுத்தி நம் சமூகத்தில் இன்னமும் இருக்கிறது. அதை பற்றி கணவரிடம் பேசுவதும், செக்ஸில் எனக்கு இன்னும் தேவைகள் இருக்கின்றன என்று கணவரிடம் கேட்பதும் குடும்ப பெண்களுக்கு ஏற்றதல்ல என்கிற எண்ணத்தையும் நம் சமூகம் பெண்கள் மனதில் ஏற்றி வைத்திருக்கிறது.
கூடவே, பெண் என்றால், அவள் உடல்வாகு இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தையும் அவர்கள் மனதில் ஆழ விதைத்திருக்கிறது. உண்மையில், இப்படி விதைத்திருப்பவையெல்லாம் ஆண்களின் விருப்பங்களைத்தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
இதன் காரணமாக, இடுப்பு பெரிதாக இருக்கிறது; மார்பகம் சிறியதாக இருக்கிறது என்பதுபோல தங்கள் உடலில் ஏதாவது குறை இருப்பதாக பெண்கள் மனதில் தோன்றிவிட்டால், அது அவர்களுடைய தாம்பத்திய உறவிலும் பிரதிபலிக்கும். விளைவு உறவின்போது அந்தப் பகுதிகளை மறைக்கப் பார்ப்பார்கள். இது புரியாமல், ‘நீ ஏன் இப்படிப் பெருத்துப்போய் கிடக்கிறே; அந்த ஆக்ட்ரஸுக்கு இருக்கிற மாதிரி பிரெஸ்ட் இருந்தாதான் லேடீஸ்க்கு அழகு’ என்பது போன்ற கணவர்கள் வார்த்தைகளை விட்டுவிட்டால், அதை மனைவிகள் மறக்கவும் மாட்டார்கள்; கணவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
சினிமாவில் சில நடிகர்கள், தங்களுக்கு மனைவியாக நடிக்கும் பெண்களின் உடலை மிகமோசமாக உருவகேலி செய்வார்கள். அதை நகைச்சுவை என்று நினைத்துக்கொண்டு பல கணவர்களும் தங்கள் மனைவியிடம் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த உருவகேலி எல்லை மீறும்போது, அது தாம்பத்திய உறவையே அழித்துவிடும் என்பதை ஆண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.